டெல்லியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 781 பேர் சென்னை வந்தனர் - தனியார் லாட்ஜ், முகாம்களில் தங்க வைப்பு
டெல்லியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் சென்னை வந்த 781 பேர் தனியார் லாட்ஜ் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் கொரோனா அறிகுறி சோதனை செய்யப்பட்டது.
சென்னை,
கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், கல்வி, பணி நிமித்தமாக சென்றிருந்தவர்களும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து சிறப்பு ரெயில்கள், பஸ்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்தநிலையில் கட்டணத்துடன் கூடிய 30 சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு இந்தியன் ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில் நேற்று இரவு சென்னை வந்தடைந்தது.
1,100 பயணிகளுடன் புறப்பட்ட அந்த ரெயிலில் மற்ற ரெயில் நிலையங்களில் இறங்கிய பயணிகள் போக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு 781 பயணிகள் வந்தனர்.
இந்த சிறப்பு ரெயில் நேற்று இரவு 8.40 மணிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்கூட்டியே 8.10 மணிக்கு சென்னை வந்தடைந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையாக வெளியேறினர். அப்போது அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனா அறிகுறி பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து தனியார் லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் தங்க விரும்பிய 200 பேர், அந்தந்த இடங்களுக்கு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டணம் இல்லாமல் தங்க விரும்பிய 581 பேர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ரெயிலில் வந்த 781 பேருக்கும் பி.சி.ஆர் கருவி மூலம் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
பரிசோதனை முடிவின் அடிப்படையில் அவரவர் சொந்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் 14 நாட்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். ஊரடங்கு காலத்தில் முதல் சிறப்பு ரெயிலில் சென்னை வந்த பயணிகளை ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தநிலையில் இன்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் சிறப்பு ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் நேற்று இரவு சென்டிரல் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். இதேபோல் இன்று டெல்லியில் இருந்து மற்றொரு ரெயில் சென்னைக்கு புறப்படுகிறது. அந்த ரெயில் நாளை சென்னை வந்தடையும்.