தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 1-ந்தேதி தொடக்கம் - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ஜூன் 1-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்து உள்ளது. பிளஸ்-1 இறுதி நாள் தேர்வு 2-ந் தேதி நடக்கிறது.
சென்னை,
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டு இருந்த பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் தேர்வும் தள்ளிவைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.
கொரோனா பரவுவது தொடர்ந்து நீடிப்பதால், நாடு முழுவதும் ஊரடங்கு 3 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
இதனையடுத்து, சில கல்வியாளர்கள் தேர்வை நடத்தாமல், வேறு விதமாக தேர்ச்சி வழங்கலாம் என்பது உள்பட பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். இதற்கிடையே, பொதுத்தேர்வு குறித்து அவ்வப்போது வதந்திகளும் வெளியானதால் மாணவர்களும், பெற்றோரும் தெளிவான முடிவு எப்போது தெரியும்? என்று எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், விடுபட்ட பிளஸ்-1 தேர்வும் எப்போது நடக்கும்?, விடைத்தாள் திருத்தும் பணி எப்போது தொடங்கும்?, தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? என்பன போன்ற கேள்விகளுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பதில் அளித்தார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:-
ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து தேர்வுகளும் காலையில் 3 மணி நேரம் நடைபெறும்.
பிளஸ்-1 பொதுத்தேர்வில் இறுதி நாள் (மார்ச் 26-ந்தேதி) தேர்வான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வை ஜூன் 2-ந்தேதி எழுத வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும், பிளஸ்-2 இறுதிநாள் தேர்வில் (மார்ச் 24-ந்தேதி) பஸ் கிடைக்காமல் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்ட 36 ஆயிரத்து 842 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, அவர்களுக்கு ஜூன் மாதம் 4-ந்தேதி தேர்வு நடைபெறும்.
தேர்வு எழுதும்போது, மாணவர்கள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக் கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரம் ரீதியாகவும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு முதல்- அமைச்சர் உத்தரவு வழங்கி இருக்கிறார்.
விடைத்தாள் திருத்தும் பணி
தேர்வு நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 27-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவை வெளியிடுவதற்கான பணி அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இதேபோல், அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்கி, 23-ந்தேதி வரையில் பிளஸ்-1 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். அதற்கு அடுத்த 10 நாட்கள் தேர்வு முடிவை வெளியிடுவதற்கான பணிகள் நடக்கும்.
எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையில் விடைத்தாள் திருத்தும் பணிகளும், 24-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை தேர்வு முடிவை வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெறும்.
ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விடைத்தாள் திருத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை என்ன அறிவுரைகள் வழங்குகிறதோ? ஆசிரியர்கள் என்ன விரும்புகிறார்களோ? அவை முதல்- அமைச்சரின் ஒப்புதலோடு செயல்படுத்தப்படும்.
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கல்வி கட்டணம்
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சென்னையில் இன்னும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. ஜூன் 1-ந்தேதிக்குள் பொது போக்குவரத்து தொடங்கிவிடுமா? அப்படி தொடங்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்:- சென்னையில் அதுபோன்ற நிலை நீடிக்குமானால், முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று, இந்த மாதத்தின் 3-வது வாரத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கேள்வி:- அரசாணை வெளியிட்டும், கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி சில பள்ளிகள் வற்புறுத்துவதாக தகவல் வருகிறதே?
பதில்:- கல்வி கட்டணம் உடனே செலுத்துச் சொல்லி, எந்த பள்ளிகள் வற்புறுத்துகின்றனவோ? அதுகுறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
‘நீட்’ பயிற்சி வகுப்பு
கேள்வி:- ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள் என்ன நிலையில் இருக்கிறது?
பதில்:- ‘நீட்’ பயிற்சி வகுப்புகளை பொறுத்தவரையில், 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 2 வார கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. அதன்பிறகு, சரியான நிலைக்கு வந்த பிறகு, முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று, நீட் தேர்வில் ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 10 கல்லூரிகளை ஏற்பாடு செய்து உள்ளோம். அங்கு உணவு, தங்கும் வசதிகள் அளிக்கப்பட்டு ‘நீட்’ தேர்வுக்கு அடுத்த மாதத்தில் பயிற்சி வழங்கப்படும். ஆன்லைன் மூலமும் படிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.