66-வது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
66-வது பிறந்த நாளான நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 66-வது பிறந்த நாள் ஆகும். ஆனால், அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. கொரோனா வைரஸ் தாக்குதல் பிரச்சினை இருப்பதால், பிறந்தநாளையொட்டி அவர் யாரையும் சந்திக்கவில்லை. இருந்தாலும், தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் போன் மூலம் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், டுவிட்டர் மற்றும் அறிக்கை மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் விவரம் வருமாறு:-
பிரதமர் நரேந்திரமோடி:-
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல் நலத்துடன் நீண்டகாலம் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக் கிறேன்.
தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் அருளோடு, உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-
இன்று பிறந்தநாள் காணும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நலமோடு, புகழோடு, மகிழ்வோடு வாழ்க... வாழ்க... பல்லாண்டு வாழ்க. உங்களின் நல்லாட்சி தொடர்ந்து நடக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன்:-
அகவை 66-ல் அடியெடுத்து வைக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, எனது சார்பாகவும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டான சூழலில் தமிழகத்தை ஆரோக்கியத்தை நோக்கியும், வளர்ச்சியை நோக்கியும் எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பில் உள்ள தங்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் ஆரோக்கியத்தையும், ஆயுளையும், அமைதியையும், வளங்களையும் அருள பிரார்த்திக்கிறேன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:-
தமிழகத்தின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.