மாநிலங்களவையின் இடையூறு இல்லாமல் விவாதிப்பதுதான் முன்னோக்கிச் செல்ல உதவும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து
மாநிலங்களவையின் இடையூறு இல்லாமல் விவாதிப்பதுதான் முன்னோக்கிச் செல்ல உதவும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலை வருமான வெங்கையா நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
68 ஆண்டுகளுக்கு முன்பு 1952-ம் ஆண்டு மே 13-ந் தேதியன்று மாநிலங்களவையின் முதல் கூட்டம் நடந்தது. நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களவைக்கும் சரிசமமான அதிகாரத்தை இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ளது. சில அம்சங்களில் மட்டும் விதிவிலக்கு உள்ளது.
நிதி தொடர்பான மசோதாக் கள் நாடாளுமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்படும். அதுபோல மத்திய அரசின் மானியங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு அனுமதி அளிப்பதும் நாடாளுமன்றம்தான்.
இதுபோன்ற மசோதாக்களை திருத்தியோ அல்லது திருத்தாமலோ 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட வேண்டும். இல்லாவிட்டால், அது திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக கருதப்படும். அந்த வகையில் இதுவரை 63 நிகழ்வுகள் நடந்துள்ளன.
சிறப்பு அதிகாரங்கள்
மாநிலங்களவைக்கு சில சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. மாநில அளவில் சில அம்சங்களில் சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும், அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்குவதிலும் மாநிலங்களவைதான் முதலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அறிவிக்கப்பட்ட அவசர காலத்தையும், ஜனாதிபதி ஆட்சியை அங்கீகரிக்க மாநிலங்களவைக்கு அதிகாரம் உண்டு.
மாநிலங்களின் கவுன்சில் என்றும் அழைக்கப்படும் மாநிலங்களவையை நாடாளுமன்றத்துக்கு இணையாக அமைப்பதில் 1949-ம் ஆண்டு தீவிரமாக சாசன குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. 8 நாட்களாக நடந்த விவாதத்தில், அறிஞர்களுக்கென்று ஒரு அவை வேண்டும் என்று வைக்கப்பட்ட கருத்து வெற்றி பெற்று மாநிலங்களவை தோற்றம் பெற்றது.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றுக்கான தேர்தலில் வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் நாடாளுமன்றம் முடிவுக்கு வந்தாலும், மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.
இணைந்த அமர்வுகள்
1952-ம் ஆண்டில் மே 13-ந் தேதி முதல் அமர்வு அமர்ந்தது. இதுவரை அங்கு 5,472 அமர்வுகள் நடந்து 3,837 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேசிய கட்டுமானத்தில் இரண்டு அவைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இரண்டு அவைகளிலும் சட்ட ரீதியாக எழுந்த சில வித்தியாசங்களில் தீர்வு காண்பதற்காக 3 முறை மட்டுமே இரண்டு அவைகளும் இணைந்த அமர்வு நடத்தப்பட்டது.
ஆதரவு இல்லாமலே...
வரதட்சணை தொடர்பான மசோதாவை மாநிலங்களவை நிராகரித்தபோது 1961-ம் ஆண்டு இரண்டு அவைகளும் இணைந்த முதல் அமர்வு நடந்தது. வங்கி சேவைகள் ஆணையம் தொடர்பாக 1978-ம் ஆண்டிலும், தீவிரவாத தடுப்புச் சட்ட மசோதாவை மாநிலங்களவை நிராகரித்தபோது 2002-ம் ஆண்டிலும் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது. அப்போதெல்லாம் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு போதிய எண்ணிக்கையில் ஆதரவு இல்லை.
மாநிலங்களவையில் போதிய எண்ணிக்கையில் ஆதரவு இல்லாத நிலையில்கூட இந்த அரசு, ஜி.எஸ்.டி, முத்தலாக், ஜம்மு காஷ்மீர், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற மிக முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
குறையும் திறன்
மாநிலங்களவையில் இடையூறு நடவடிக்கைகள் தற்போது பெரிய கவலை அளிப்பதாக உள்ளது. மாநிலங்களவையின் செயல்பாட்டுத் திறன் 1997-ம் ஆண்டு வரை 100 சதவீதமாக இருந்தது. ஆனால் 1998-2004 வரை 87 சதவீதமாகவும், 2015-ம் ஆண்டில் இருந்து 61 சதவீதமாகவும் குறைந்துகொண்டே வந்துள்ளது.
பொறுப்புகளை செயல்படுத்துவதை உறுதி செய்வதில் செலவழிக்கப்படும் நேரமும் 39.50 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து, கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு 12.34 சதவீதமாக குறைந்துவிட்டது.
ஆனால் பொதுமக்கள் பிரச்சினையை விவாதிப்பதில் அதற்கான நேரம் கூடியுள்ளது. 1978-2004ம் ஆண்டுகளில் 41.42 சதவீதமாக இருந்த நிலை, 2015-ம் ஆண்டுக்குப் பிறகு 46.59 என்ற நிலையை எட்டியுள்ளது.
அரசியல் உணர்வுகள்
சட்டங்களை இயற்றுபோது ஏற்படும் இடர்பாடுகளால், பலமுறை விவாதமின்றியே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1998-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் இடையூறின் போக்கு, எல்லா தரப்பினருக்கும் கவலை அளிப்பதாக உள்ளது. இடையூறை ஏற்படுத்துவதன் அடித்தளத்தில் அரசியல் உணர்வுகள் இருக்கக் கூடாது.
தடை ஏற்படுத்துவதற்கும் இடையூறுக்கும் இடையே நூலிழை வித்தியாசம்தான் உள்ளது. மாநிலங்களவையின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதை சுமுகமாக நடைபெறுவதில் பங்கு உள்ளது. மாநிலங்களவையில் ஒவ்வொரு பிரச்சினை பற்றியும் இடையூறு இல்லாமல் ஆலோசிப்போம், விவாதிப்போம், தீர்மானிப்போம் என்பதுதான் முன்னோக்கிச் செல்லும் நடையாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.