“மதுக்கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்” - தமிழக அரசு மீது ரஜினிகாந்த் திடீர் பாய்ச்சல்
மதுக்கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் என்றும், கஜானாவை நிரப்ப நல்ல வழியை பாருங்கள் என்றும் தமிழக அரசுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட்ட நிலையில், கடந்த 7-ந் தேதி சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சமூக விலகல் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால், திறந்து 2-வது நாளுடன் மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், தமிழக அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும். தயவு கூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.