மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்கள் பற்றி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம்
மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வராமல் நிறுத்தி வைக்கும்படி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்கள், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும் உள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வர இருக்கும் மின்சார சட்டத்திருத்தங்கள், நடைமுறையில் உள்ள மின்சார சட்டத்தின் வரம்புகளை குறைக்கும் வகையில் உள்ளது. மாநில அரசின் நலன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மின்சாரத்துறையில் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் திருத்தம் உள்ளது. இது மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். சட்டத்திருத்தம் வந்தால் உழவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்.
கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்துவதால் மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை. அதனால் மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என கடிதத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.