தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு கூடுதலாக உணவு, குடிநீர் வழங்க வேண்டும் - அலுவலர்களுக்கு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவு
சென்னையில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு கூடுதலாக உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் சிறப்பு அலுவலர்கள், பல்வேறு மண்டல அளவிலான சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி இந்திய தொழில்நுட்ப கழக வளாகத்தில் உள்ள மையம், செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள மையம் மற்றும் செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களையும் சிறப்பு அதிகாரி மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதித்த நபர்களுக்கான பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ள உணவு பட்டியலின்படி, இந்த மையங்களில் உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.
மேலும், சிகிச்சை பெற்று வரும் நபர்களின் கோரிக்கையின்படி கூடுதலாக உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எந்த ஒரு அறிகுறியும் இன்றி வைரஸ் நோய்த்தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, தற்பொழுது எந்தவொரு மருத்துவ உபகரணங்களின் உதவியின்றி இயல்பாக உள்ள நோயாளிகள் சென்னையில் உள்ள பல்வேறு கொரோனா மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இதுவரை மொத்தம் 753 பேர் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கவைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த அனைத்து மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாள்தோறும் சத்தான, தரமான உணவு பொதுசுகாதாரத்துறையின் அறிவுரையின்படி வழங்கப்பட்டு அவர்களின் உடல்நிலை மருத்துவ அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின்போது, சிறப்பு குழு அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாக கமிஷனர் பாஸ்கரன், தெற்கு வட்டார துணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் அமர் குஷாவா, டாக்டர் ஜெ.யு.சந்திரகலா, மண்டல அலுவலர் உட்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.