கொரோனா தடுப்பு பணி; ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் பணி நியமனம்
கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது. அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள். தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.