43 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால் ‘குடி’மகன்கள் உற்சாகம்: மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்
43 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால், மதுக்கடைகளில் நேற்று ‘குடி’மகன்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட தூரம் வரிசையில் நின்று மதுபாட்டில்களை உற்சாகத்துடன் வாங்கிச் சென்றனர்.
சென்னை,
கொரோனா மிரட்டலுக்கு இடையே, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் 7-ந்தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்தநிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன.
உற்சாகம்
வழக்கமாக மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 10 மணி நேரம் இயங்கும். ஊரடங்கு காரணமாக ‘டாஸ்மாக்’ கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே நேற்று அதிகாலை முதலே ‘டாஸ்மாக்’ கடைகளின் முன்பு ‘குடி’மகன்கள் காத்திருக்க தொடங்கினர். பல ஊர்களில் கடையை திறப்பதற்கு ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
மதுக்கடைகள் திறக்கப்பட்டவுடன் வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். பணம் கொடுத்து ஒவ்வொருவராக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மதுவை முதலில் வாங்கியவர் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டது.
அலைமோதிய கூட்டம்
சில ஊர்களில் திருவிழா போன்று மதுபிரியர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வர வேண்டும். ஆதார் அட்டை கட்டாயம், வயதுவாரியாக மது விற்பனை என்று பல்வேறு கெடுபிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் மதுப்பிரியர்களின் ஆர்ப்பரிப்பில் அவை அனைத்தும் கானல்நீராய் போயின. வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ஒரே வரிசையில் மதுவுக்காக காத்து நின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கொட்டமேடு ஆகிய பகுதிகளில் மாநாடு போன்று மதுப்பிரியர்கள் கூட்டம் காணப்பட்டது. டோக்கன் வழங்கி வரிசையில் செல்ல அனுமதித்ததாலும், மதுவை வாங்கும் ஆர்வத்தில் மதுப்பிரியர்கள், கொரோனா பற்றிய பயத்தையும், சமூக இடைவெளியையும் மறந்தனர்.
தள்ளுமுள்ளு
சில கடைகளின் முன்பு மதுப்பிரியர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள்.
ஒருவருக்கு ஒரு பாட்டில் (750 மி.லி.) அளவு மட்டும் சரக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், அந்த அளவை தாண்டியும் தாரள மனசுடன் ஊழியர்கள் விற்பனையில் ஈடுபட்டனர். மதுபான விலை உயர்த்தப்பட்டு இருந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. மதுபிரியர்கள் தங்களுக்கு வேண்டிய அளவு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
சில கடைகளில் டோக்கன் வழங்கி மதுபிரியர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 5 மணிக்கு மேல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சில கடைகளில் மதுபானங்கள் 5 மணிக்கு முன்பே விற்று தீர்ந்து விட்டது. இதனால் மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இத்தனை நாட்கள் விற்பனையாகாமல் இருந்த சரக்கு அனைத்தும் ஒரே நாளில் விற்று தீர்ந்தது. மது விற்பனை தொடங்கியதையடுத்து தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனி விற்பனையும் நேற்று சூடு பிடித்தது.
பொதுமக்கள் எதிர்ப்பு
தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தஞ்சை பூக்காரத்தெரு, அம்மாப்பேட்டை அருகே உள்ள செண்பகாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கோவிந்தகுடியில் உள்ள ஒரு மதுக்கடையில் கூட்டம் அலைமோதியதால் மதுக்கடைக்கு போலீசார் பூட்டு போட்டனர். மதுவாங்க வந்த வெளியூர் நபர்களின் மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
நாகை மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், பூவைத்தேடி, புத்தர்மங்கலம், கூறைநாடு, ஆணைக்கரைசத்திரம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
சில கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நின்று கொண்டிருந்தவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி ஒழுங்குபடுத்தினர்.
கிருமி நாசினி தெளிப்பு
கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மது வாங்க வரிசையில் நின்றவர்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பெரும்பாக்கம், சிறுவாக்கூர், கரடிப்பாக்கம், ஜெயங்கொண்டான் ஆகிய கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
கோவை புறநகர் பகுதிகளில் காலை முதலே மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தண்ணீர் பாட்டில்களுடன் வந்து வரிசையில் நின்றனர்.
மதுக்கடை திறக்கப்பட்டதும் மது பிரியர்கள் கைதட்டி, விசிலடித்து தங்களது மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். ஒருசில இடங்களில் பெண் களும் வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர்.
ஒருசில இடங்களில் மது பிரியர்கள் மதுவை கையில் வாங்கியதும் கடையின் முன்பே நின்று குடித்ததை பார்க்க முடிந்தது.
போலீஸ் தடியடி
திண்டுக்கல் மாவட்டத்தில் மது வாங்க காலை 9 மணி முதலே டோக்கன் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக சில இடங்களில் மது பிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்றவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் நகரப்பட்டியில் உள்ள டாஸ்மாக்கடையில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் சடையம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் அவர் மது வாங்கி சென்றார்.
விற்பனையாளருக்கு மாலை அணிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பச்சை வண்ண அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே நேற்று மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
அதே நேரத்தில் இந்த விதிமுறையை மீறி பச்சை வண்ண அட்டை இல்லாமல் வந்தவர்களுக்கு மது விற்றதாகவும், மது பிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மதுபானங்களை விற்றதாகவும் 2 டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ராசிபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களுக்கு மதுபிரியர்கள் மலர் தூவி மாலை அணிவித்த சம்பவமும் நடைபெற்றது.
வேலூர் காகிதப்பட்டறையில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டாசு வெடித்து ‘கேக்’ வெட்டினர்
திருப்பூர் மாவட்டத்தில் குடை கொண்டு வந்தால்தான் மதுபானம் கிடைக்கும் என்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் மதுபிரியர்கள் காலை 8 மணி முதலே குடையுடன் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு குவிந்தனர். ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு குடை வியாபாரிகள் ரூ.10-க்கு குடைகளை வாடகைக்கு விட்டனர்.
தாராபுரம் ரோடு கோவில் வழி அருகே புது ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு வந்த மதுபிரியர் ஒருவர், கடையை திறந்ததும் கடைக்கு முன்பு, தான் பையில் கொண்டு வந்த மலர்களை தூவினார். மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட அவர் விற்பனையாளர், மதுபிரியர்கள், காவல் பணியில் இருந்த போலீசார் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறினார்.
திருப்பூர் எம்.எஸ். நகரில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று காலை திறக்கப்பட்டதும் அங்கு வந்த மது பிரியர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
சிவப்பு கம்பளம்
மதுக்கடையை திறந்தது மகிழ்ச்சி என்றாலும் மதுபான கூடங்களை திறக்காதது கவலை அளிப்பதாகவும், எனவே அரசு மதுபான கூடங்களையும் திறக்க வேண்டும் என்று மது பிரியர்கள் சிலர் கூறினார்கள்.
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் 5 பேருக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்று சட்டம் இருந்தாலும், மதுக்கடையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்த காட்சியை பார்க்கிற போது கொரோனாவுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.