தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவரை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை - அரசாணை வெளியீடு
ஊரடங்கால் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத்தவரை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் வெளிமாநில சுற்றுலா பயணிகள், ஆன்மிக சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள், மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான வழிகாட்டிகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களை எளிதாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் பற்றி அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார். அதனடிப்படையில் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிடுகிறது.
மத்திய அரசின் ஏப்ரல் 29-ந்தேதி உத்தரவுப்படி, பிற மாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை இடமாற்றம் செய்யும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான இடமாற்றம் அனுமதிக்கப்படுகிறது. இந்த பணிக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மாநில அளவிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர்களும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் சிக்கியுள்ள பிற மாநிலத்தவர் முதலில் http://no-n-r-es-i-d-e-ntt-a-m-il.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், ’இ-பாஸ்’ பெறுவதற்காக http://tne-pass.tne-ga.org என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிக்கித்தவிப்போர் வீடு திரும்பும் வசதி என்ற அம்சம் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. திருமணம், இறுதிச்சடங்கு, மருத்துவ அவசரம் போன்ற அறிவிக்கப்பட்ட காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்காகவும் மாவட்டங்களுக்குள், மாநிலத்துக்குள், வெளிமாநிலத்துக்கு இடம் பெயர்ந்து செல்ல பாஸ்கள் வழங்க இதில் வசதிகள் உள்ளன. இ-பாஸ் இல்லாமல் யாரும் எந்த இடத்துக்கும் செல்ல அனுமதி கிடையாது.
ஆட்களை இடமாற்றம் செய்வதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன்படி இடம் மாறி வந்து சிக்கித்தவிக்கும் தனிப்பட்ட நபர், குடும்பத்தினர், மாநிலத்துக்குள் வரவோ அல்லது வெளியேறவோ, ‘இ-பாஸ்’ வாங்கி சொந்த வாகனத்தை பயன்படுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
குழுவாக இடம் மாறுவோருக்கு ரெயில் அல்லது பஸ் வசதி அளிக்கப்படுகிறது. குழுவினரின் எண்ணிக்கை அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. கலெக்டரின் அனுமதி இல்லாமல் குழுவாக யாரும் செல்ல முடியாது.
சிறு குழுக்கள் என்றால் மாநில போக்குவரத்து பஸ்கள், கோரிக்கையின் அடிப்படையில் விடப்படலாம். அவர்கள் செல்ல இருக்கும் மாநில அரசு, அந்த மாநிலத்தின் பஸ்சையோ, தனியார் பஸ்சையோ அளிக்க முன்வந்தாலோ அல்லது சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்ய கோரினாலோ அதை அரசு பரிசீலிக்கும்.
பெருங்குழுவாக அடுத்த மாநிலத்துக்கு செல்ல வேண்டும் என்றால், ரெயில்வே மூலம் ‘பாயிண்ட் டு பாயிண்ட்’ ரெயிலை அந்த 2 மாநிலங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வர அரசு போக்குவரத்து கழக பஸ் ஏற்பாடு செய்யப்படும்.
இதற்காகும் செலவை அவர்கள் செல்ல இருக்கும் மாநில அரசோ அல்லது தனி நபர்களோ ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் அளிக்கப்படும்.
வேறு மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் நபர்கள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அருகில் உள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். சோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்தால், வீட்டில் 28 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள்.
தொற்று இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள், வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். தொற்று இருப்பது தெரியவந்தால், பயணத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். தனிப்பட்ட முறையில் பயணம் செய்வோருக்கு சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.