மதுபானக்கடைகளை திறப்பதா? கருப்பு சின்னம் அணிந்து இன்று கண்டன போராட்டம் - தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
மதுபானக்கடைகளை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து இன்று கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மக்களிடையே ஏற்படுத்திவரும் பாதிப்பும் இழப்பும், அச்சம் தருவதாக உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதே கதியில் தொடருமானால், அது எங்கே போய் முடியுமோ என்று எண்ணிப் பார்க்கவே இதயம் படபடக்கிறது. ஆனால், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசின் அணுகுமுறைகளையும் முடிவுகளையும் நடவடிக்கைகளையும் பார்த்தால், கொரோனா குறித்த முழுமையான பார்வையும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பும் போதிய அளவுக்கு இல்லை என்று தோன்றுகிறது.
தொடக்கத்திலேயே, தலை நகரத்திலும் ஏனைய மாவட்டங்களிலும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில், தீவிரமாகப் பாதிக்கப்படப்போகும் பகுதிகளை அடையாளப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. இது மறைமுக எதிரியுடன் நடத்தப்படும் போர். போர்க்காலத்தில் அடி முதல் நுனி வரை ஒருங்கிணைப்பும், கடமையும், பொறுப்பும், இவற்றை பரவலாக்குதலும் அவசியம். அ.தி.மு.க. அரசில் அறிவியல் பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லை.
அதிகாரத்தை மையப்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. போர்க்காலத்தில் அரசியலுக்கு இடமில்லை. ஆனால், அ.தி.மு.க. அரசு, அரசியல் கணக்குப் போட்டு, பல தரப்பிலிருந்தும், குறிப்பாக, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், வல்லுனர்கள் மற்றும் சான்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை பரிசீலனை செய்யும் மனநிலையில் இல்லை. ஊரடங்கை அரசு படிப்படியாக ரத்து செய்து, அதன் வலிமையை குறைப்பது என்பது அப்பாவி பொதுமக்களை நட்டாற்றில் கைவிடுவதற்கு ஒப்பாகும்.
தினக்கூலித் தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முடங்கியதால் வேலை இழந்தோர், சிறு வணிகர்கள், இங்கிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து, அவற்றுக்கான தீர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் சிந்திக்கப்படவில்லை. ஆனால், 7-ந்தேதி (இன்று) முதல் மதுபானக்கடைகளை திறப்பது என்று அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவின் காரணமாக சமூகத்தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என்பதால், அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. தோராயமாக இதற்கு ரூ.3 ஆயிரத்து 850 கோடி தேவைப்படும். இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அரசுக்கு இது சாத்தியமானதே ஆகும்.
கொரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மீட்பு நடவடிக்கை மறுவாழ்வு பற்றி கவலைப்படாமலும், திடீரென மதுபானக்கடைகளை திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும்; மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் மே 7-ந்தேதி (இன்று) ஒருநாள் மட்டும் கருப்பு சின்னம் அணிவது என்றும், அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் 5 பேருக்கு அதிகமாகாமல் 15 நிமிடங்கள் நின்று, ‘கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசை கண்டிக்கிறோம்’ என முழக்கமிட்டு கலைவதென்றும்; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலட்சியமும், ஆணவமும் கொண்ட தமிழக அரசுக்கு, கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் பெரும் பாதிப்பை உணர்த்திடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டிக்கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழக மக்கள் அணியப் போகும் கருப்பு சின்னம், அ.தி.மு.க. அரசின் கண்களை திறக்கட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா கொள்ளை நோய் பேரிடரை கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்ட தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கட்சி, அரசியல் எல்லைகளைத் தாண்டி தமிழக மக்களை பாதுகாக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் வீடுகளின் வாயில்களில் நின்று கருப்புச் சின்னம் அணிந்து, விண்ணதிர கண்டன முழக்கம் எழுப்பி இந்த அறப்போர் இயக்கத்தை வெற்றி அடையச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினர், ஆதரவாளர்கள், அனுதாபிகள் மற்றும் அனைத்து பகுதி பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு முன்பாகவும், ஆங்காங்கு உள்ள கட்சி அலுவலகங்களுக்கு முன்பாகவும் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். நாளை (இன்று) ஒரு நாள் முழுவதும் அனைவரும் கருப்பு பட்டை அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுக்கடைகள் திறப்பு நடவடிக்கை கைவிடப்படவேண்டும். பசியும் பட்டினியுமாக வாழ்ந்து வரும் ஏழை-எளிய மக்களுக்கு நிதியுதவி செய்து ஆதரிக்காமல், அறிவுரை கூறி வரும் மத்திய அரசையும், அ.தி.மு.க. அரசையும், கண்டித்தும், எதிர்த்தும், நேரடியாக களம் இறங்கி போராடுவது தவிர வேறு வழி ஏதும் இல்லை. 7-ந்தேதி (இன்று) கண்டன முழக்க போராட்டத்தில் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், உழைக்கும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்று ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைப்போல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பால் தமிழகம் திண்டாடிவரும் சூழலில் மதுக்கடைகளை திறந்து, மேலும் கொரோனா தொற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து கறுப்பு சின்னம் அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்ப தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகள் நாளை (இன்று) நடத்த முடிவு செய்துள்ள போராட்டத்தில் முழுமையாக பங்கு கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.