கடலூரில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. தமிழகத்தில் 3,023 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 1,379 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 30 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் கடந்த 1ந்தேதி 2 பேருக்கும், பின்னர் நேற்று முன்தினம் 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பின்படி, நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடலூரில் இருந்து காய்கறிகளை விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தைக்கு வந்து விட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். தொடர்ந்து அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
இந்த நிலையில், கடலூரில் இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த 107 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள். கோயம்பேட்டில் இருந்து வந்த மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
இதேபோன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பியவர்களில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 129 ஆக உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்து உள்ளது.