சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகள் மீது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன
சென்னை அரசு ஆஸ்பத்திரிகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
சென்னை,
சென்னையில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடர்ப்பாடான இச்சூழலிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நோயாளிகளுக்கு இரவுபகலாக கண்விழித்து சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் உன்னத சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஆஸ்பத்திரிகள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி சென்னை அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் புறப்பட்ட ஹெலிகாப்டர் ஆஸ்பத்திரிகளின் மேலே தாழ்வாக பறந்தபடி பூக்களை தூவியது.
முன்னதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி வளாகத்தில் டீன் டாக்டர் ஜெயந்தி தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அணிவகுத்து நின்றனர். அவர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ வீரர்கள் பூக்களை தூவியபடி சென்றனர். இந்த காட்சி வானில் இருந்து பூ மழை பெய்வது போன்று இருந்தது. இந்த பூக்கள் பட்டதால் மருத்துவ பணியாளர்கள் உற்சாகம் அடைந்ததை பார்க்கமுடிந்தது. பூக்களை தூவி ஹெலிகாப்டர் சென்றதும் அனைவரும் கைத்தட்டி தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையை பாராட்டு விதமாக கடற்படை அதிகாரி ஷ்யாம் சுந்தர் டாக்டர் ஜெயந்திக்கு பூங்கொத்துடன் கேடயம், வாழ்த்து மடல் வழங்கினார். ராணுவ அதிகாரி கிருஷ் சூரி செவிலியர்களுக்கு 2 பரிசு பெட்டகம் வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் டீன் டாக்டர் ஜெயந்தி நிருபர்களிடம் கூறும்போது, “ராணுவத்தினர் எங்கள் மீது பூ தூவியது வீரதீர விருது கிடைத்தது போன்ற உணர்வை அளித்து உள்ளது. இது எங்களுடைய பணிக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். கொரோனாவுக்கு எதிரான போரில் இன்னும் உத்வேகமாக பணியாற்றுவதற்கு இந்த மரியாதை எங்களுக்கு உந்து சக்தியாக அமைந்து உள்ளது”, என்றார்.
இதேபோல ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவக்கல்வி இயக்குனரும், டீனுமான டாக்டர் நாராயணபாபு தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அணிவகுத்து நின்றனர். சரியாக காலை 10.35 மணியளவில் வானில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை பொழிந்தது. ஆஸ்பத்திரி வளாகத்துக்கு சிறிது தூரம் தள்ளி இந்த பூக்கள் கொட்டப்பட்டாலும், காற்றின் வேகம் காரணமாக அது சரியாக டாக்டர்கள், செலிவியர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது விழுந்தது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தனர்.
அதேபோல கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி உள்பட கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆஸ்பத்திரிகள் மீதும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன. இந்த நிகழ்வை பலரும் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று பார்த்து ரசித்தனர். அப்போது ஆரவாரம் செய்தும், கை தட்டியும் உற்சாகம் அடைந்தனர். வீடுகளில் இருந்தும் தொலைக் காட்சி வழியாக இந்த காட்சிகளை பார்த்து மக்கள் பார்த்து ரசித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கலங்கரை விளக்கம் அருகே கடலில் இரண்டு கப்பல்கள் நிறுத்தப்பட்டது. கப்பல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. சரியாக மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி 2 கப்பல்களிலும் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு முறை கப்பலில் இருந்து ஒலி (ஹாரன்) எழுப்பப்படும் போது வெடிகள் வெடிக்க பட்டு அவை வானில் வண்ண நட்சத்திரங்களாக மிளிர்ந்தன.
இந்த நிகழ்வின் போது கடற்படை அதிகாரிகள் ஒரு சிலர் கலந்து கொண்டனர். கப்பல்களில் நடத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சிகளால் கலங்கரை விளக்கம் பகுதி நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கு வண்ணமயமாக காட்சியளித்தது. இந்த காட்சி மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்தது.