விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வரும்: நெடுஞ்சாலைத் துறை டெண்டரிலும் முறைகேடு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெடுஞ்சாலைத் துறை டெண்டரிலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-05-03 23:30 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், “பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்” என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி கேட்பார். ஆனால், ஊரடங்கு நேரத்திலும், ஒரு டெண்டரை விட்டு, அதில் உள்ள முறைகேடுகள் ஐகோர்ட்டு விசாரணைக்குப் போயிருக்கிறது.

அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள், அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேட்டை” அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மனுதாரர், “இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் ரூ.500 கோடி மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், ரூ.1,165 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது ரூ.700 கோடி வரை அதிகம்” என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுதவிர “அரசு ஆணையில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும், டெண்டரில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது” என்பதையும் விளக்கிக் கூறியிருக்கும் அந்த மனுதாரர் “டெண்டருக்காக குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் பல. ஒருசில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு காண்டிராக்டர் ஊரடங்கு நேரத்திலும் வழக்குத் தொடருவதற்கு காரணமான இந்த டெண்டரில், துறை அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கொரோனா பணிகளுக்கு இடையிலும் அவசரம் காட்டியது ஏன்?. சாலை பராமரிப்புக்கான, 5 வருட பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு ஊரடங்கு முடிவிற்கு வரும் வரை ஏன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுத்திருக்கவில்லை?.

கொரோனா நோய்த் தொற்றுப் பணியில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்; போர்க்கால அடிப்படையில் பணியாற்றுகிறோம் என்பதில், இப்படி ஐகோர்ட்டு வரை போகும் முறைகேடுகள் அடங்கிய டெண்டர்களை விடும் பணிகளும் அடங்கியுள்ளனவா?. இப்படி அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்கத் தோன்றுகிறது.

யாரும் தப்பிவிட முடியாது

இந்த வழக்கை நிச்சயம் ஐகோர்ட்டு விசாரிக்கத்தான் போகிறது. அந்த விசாரணையில் டெண்டர் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரத்தான் போகின்றன. எல்லா வழக்கிலும் ஓடோடிச் சென்று “ஸ்டே” வாங்குவது போல், இந்த வழக்கையும் இழுத்தடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யலாம். ஆனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அதிகார துஷ்பிரயோகம்?. எந்த ஊழலில் இருந்தும் யாரும் தப்பிவிட முடியாது என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்