மீண்டும் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எவை? - தமிழக அரசு உத்தரவு

கட்டுமானங்கள் நடைபெறும் பகுதிகள் உள்பட மீண்டும் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எவை? என்பது குறித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

Update: 2020-05-03 22:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவில் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து தலைமைச் செயலாளர் க.சண்முகம் நேற்று ஆணை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த ஊரடங்கு தளர்வு 4-ந்தேதியில்(இன்று) இருந்து வருகிற 17-ந்தேதி வரை நீடிக்கும். இந்த ஊரடங்கு தளர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அந்தவகையில் அனைத்து தொழில் நிறுவன வளாகங்கள் மற்றும் வாகனங்களில் ஒரு நாளுக்கு 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை கழிவறைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலைக்குள் நுழையும்போது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யவேண்டும்.

அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மருத்துவ ரீதியாக உடல் தகுதி உள்ள நபர்களையும், 55 வயதுக்கு உள்பட்டவர்களையும் மட்டுமே முதல் கட்ட பணிக்காக அழைக்க வேண்டும்.

33 சதவீத பணியாளர்களுடன்...

ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யும் தொழில் நிறுவனம், அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தொடர்பு வைப்பதோடு தினமும் அந்த நிறுவனத்துக்கு டாக்டர் வந்து செல்லவேண்டும். பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக கருதப்படும் கடைகள், காய்கறி விற்பனை செய்யும் சந்தைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை பெரிய மைதானத்துக்கு மாற்றப்படலாம்.

அனைத்து மத்திய மாநில அரசுகளின் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். மீண்டும் இயங்கத் தொடங்கும் தொழில் நிறுவனங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஊழியர்களை பணிக்கு அழைக்கக்கூடாது.

தனித்தனியாக நுழைவு வாயில்

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில்பேட்டைகளில் இயங்கும் தொழிற்சாலைகள் தங்களுடைய ஊழியர்களை முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு தனித்தனியாக நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழி வைக்க வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர் மற்றும் நோயினால் பலவீனப்பட்டவர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்படவேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும்போதே அனைவரும் முககவசம் அணிந்து கொள்ளவேண்டும். பஸ், வேன் போன்றவற்றில் ஊழியர்கள் அழைத்து வரப்படும்போது அதன் கொள்ளளவில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே ஏற்ற வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

டிரைவர் தவிர, கார் மற்றும் ஜீப்புகளில் 2 பேர் மட்டுமே அழைத்து வரப்படவேண்டும். 2 சக்கர வாகனங்களில் வருபவர்கள் ஒரு ஆளாக பயணிக்கவேண்டும்.

பணி இடங்களில் தூசு சேருவதையும், உலர்முறையில் சுத்தப்படுத்துவதையும் தவிர்க்கவேண்டும். கிருமி தொற்று தொடர்பான தொடர்புகளை கண்டறிய, அனைத்து நிறுவன நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.

கட்டுமானம் பணிகள் நடக்கும் பகுதிகளில் வேலை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து தொழிலாளர்களும் கைகளை கழுவிக்கொள்ளும் வசதியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

பணி இடங்களில் நோய் தொற்று இருப்பவர் பற்றி தொழிலாளர்களுக்கோ, அலுவலகத்தில் வருபவர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ தெரிந்தால், அருகில் உள்ள சுகாதார சேவைகள் துணை இயக்குனருக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும். 24 மணி நேர இலவச உதவி எண்ணுக்கும் இந்த தகவலை தெரிவிக்கலாம். நோய் தொற்று உள்ளவர்களை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படவேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவுகளை பின்பற்றாத மற்றும் மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு க.சண்முகம் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்