கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை

சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் இணைந்து சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Update: 2020-05-03 20:30 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, கண்காணிப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ போதிய அளவு சோப்புகள் வழங்க வேண்டும். உள்ளாட்சி பகுதிகளில் வரும் புகார்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் இணைந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியில் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் அதிகமான அளவில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை சுற்றியுள்ள குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களை தனிமைப்படுத்த, மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் 21 ஆயிரத்து 866 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும், தொடர்ந்து துரிதமாக நிறைவேற்ற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், கொரோனா நோய்த்தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்