ஊரடங்கு அமலில் இருப்பதால் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பணியை எப்போது தொடங்குவது? - தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆலோசனை
ஊரடங்கு அமலில் இருப்பதால் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான பணியை எப்போது தொடங்குவது? என்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆலோசனை நடத்தியது.
சென்னை,
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. கடந்த ஆண்டில் மே மாதம் 2-ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிலவும் ஊரடங்கால், அது தொடங்க காலதாமதம் ஆகி வருகிறது.
இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2020-21-ம் ஆண்டு) என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குறித்து தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் இந்த ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
ஊரடங்கால் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகளும் நடைபெறாமல் உள்ளன. எனவே என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கலாம்? மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை எப்போது ஆரம்பிக்கலாம்? என்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து இருக்கிறது.
என்ஜினீயரிங் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், இந்த ஆண்டு 32 என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது.
விரைவில் அறிவிப்பு
அதன்படி, அடுத்த கல்வியாண்டில் எத்தனை கல்லூரிகள், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருக்கின்றன? அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை? நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை? என்பது குறித்த சில விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்பதாகவும், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களுடன், தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் ஆலோசித்த பின்னர், விரைவில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.