முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
சென்னை,
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் 138 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவே அதிக பாதிப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதையும் மிஞ்சும் வகையில் நேற்று 176 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,082 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்தநிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி உள்ளது.
இந்த ஆலோசனையில், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடா்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று குறைந்த கிராமப்புற பகுதிகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து ஆலோசன நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள சில முக்கிய பணிகள் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் எந்தெந்த பணிகளுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் என்பது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதலில் முக்கியமான முடிவை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.