சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இதுவரை 1,082 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 1,082 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் 138 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவே அதிக பாதிப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதையும் மிஞ்சும் வகையில் நேற்று 176 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,082 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 89 பேர் முதன்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் 178 பேர் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 40 குழந்தைகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் சமூக தொற்று உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று (1-ந்தேதி) ஒரே நாளில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 54 பேர் தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 203 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,082 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில், சென்னையில் 2 வயது பெண் குழந்தை உள்பட 8 குழந்தைகள் மற்றும் 168 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், மதுரையில் 3 பேரும், தஞ்சாவூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 94 பேர் முதன்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 வயது பெண் குழந்தை உள்பட 8 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 98 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.