வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்டு வழக்கு - பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-01 22:00 GMT
சென்னை, 

தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் மோட்டார் வாகன டிரைவர்கள் தொழிலையும், வருமானத்தையும் இழந்துள்ளனர். 

எனவே, வாடகை வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்ற டிரைவர்களுக்கு, இந்த ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர், இந்த மனுவுக்கு வருகிற 20-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம்’ என்று கூறியுள்ளனர்.

இதேபோன்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த பணியாளர்கள் சங்கத்தின் சார்பிலும், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம் நிதி வழங்கக்கோரி அகில இந்திய கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த இரு வழக்குகளையும் விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் வருகிற 20-ந்தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்