பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அப்புறப்படுத்துவது எப்படி?

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அப்புறப்படுத்துவது எப்படி? என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-05-01 06:23 GMT
சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,074 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது.  8,325 பேர் குணமடைந்தும், 23,651 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக உயர்வடைந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக உயர்வடைந்து உள்ளது.  8,889 பேர் குணமடைந்தும், 25,007 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50ல் இருந்து 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தநிலையில், பயன்படுத்தப்பட்ட முக கவசங்களில் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அதனை பொது இடங்கள், வீடுகள் மற்றும் திறந்த குப்பை தொட்டிகளில் பொறுப்பின்றி போடக்கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

பயன்படுத்திய முக  கவசங்களை அப்புறப்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டியது கட்டாயம் என்றும்,  துணியாலான முக கவசங்களை ஒவ்வொரு முறையும் துவைத்து  சூரிய ஒளியில் காயவைக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயன்படுத்திய N 95 முக கவசத்தை காற்று உட்புக முடியாத பைகளில் போட்டு அப்புறப்படுத்த வேண்டியது கட்டாயம்  எனவும் கூறப்பட்டுள்ளது.

சாதாரண முகக்கவசத்தை உட்புறமாக மடித்து, காகிதத்தில் சுற்றி அப்புறப்படுத்த வேண்டும்  எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்