சென்னையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மேலும் 5 போலீசாருக்கு கொரோனா

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 5 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-04-30 23:15 GMT
சென்னை, 

சென்னையில் கொரோனாவின் கொடூர தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென் சென்னையை விட அதன் கோர தாண்டவம் வட சென்னையில் அதிகமாக உள்ளது. கொரோனாவின் தாக்கத்தால், மக்கள் மே மாத கோடை வெயிலின் தாக்கத்தை மறந்து விட்டனர். கொரோனாவுக்கு பயந்து மக்கள் கோடையில் விரும்பி பருகும் குளிர்பானத்தை மறந்தனர்.

சென்னை போலீசில் ஏற்கனவே 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் குணமாகி வீடு திரும்பி விட்டார். இன்னொருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் பாதிக்கப்பட்டு அவரும் வீடு திரும்பினார். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ஒருவர், எழுத்தர் மற்றும் ஒரு போலீஸ்காரர், உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் என 4 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டனர். இதில் பெண் போலீஸ் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இல்லை என்று கூறிவிட்டனர்.

இதற்கிடையில் மாங்காடு போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று கொரோனாவால் புதிதாக தாக்கப்பட்டார். அவர் ரோந்து பிரிவில் பணியாற்றினார்.அவருக்கு எவ்வித முன் அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்கள். அவர்களும் பரிசோதனை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த குடியிருப்பு முழுவதும் சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தவிர சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ்காரருக்கும் நேற்று கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டது. அவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் வெளியூரில் உள்ளதால், அவர்கள் தப்பினார்கள். நேற்று முன்தினம் சென்னை தீயணைப்பு வீரர்கள் 3 பேர் கொரோனாவின் கொடிய பிடியில் சிக்கினார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டிரைவராக பணியாற்றும் போலீசார் ஒருவரும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டார்.

இதனால் சென்னை போலீசில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 5-ஆக உயர்ந்தது. தொற்று உறுதியான போலீசார் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள கொரோனா வார்டுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல மணலி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர் ஒருவரையும் நேற்று கொரோனா பாதித்தது. நேற்று முன்தினம் 3 தீயணைப்பு வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை தீயணைப்புத் துறையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.

உயிருக்கு மிகவும் ஆபத்தான புற்று நோயை விட, கொடியது போல கொரோனா உள்ளது. புற்று நோய் தொற்று நோய் அல்ல. ஆனால் கொரோனா தொற்று நோய். புற்று நோய் வந்த இடம் தெரியும். ஆனால் கொரோனா எப்படி வருகிறது, எப்படி போகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் புற்று நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து தப்பி, கொரோனாவால் உயிர்ப்பலியாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்