மீன்பிடி தடைக்காலம்; மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முழு ஊரடங்கு உத்தரவால் பாதிப்புக்கு உள்ளான மீனவ மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அனுசரிக்கப்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அரசால் வழங்கப்படுகிறது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் (திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி நகரம் வரை) உள்ள மீனவர் குடும்பங்களுக்கு 30-ந்தேதி (நேற்று) முதல் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் அரசால் ரூ.83.55 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களுக்கு சிறப்பு நிவாரண தொகையாக தலா ரூ.1,000 வீதம் கடல் மீன்பிடி தொழில் புரியும் மீனவர்கள், உள்நாட்டு மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த உபதொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு என மொத்தம் 4 கோடியே 31 லட்சம் மீனவர்களுக்கு நிவாரண தொகையாக இதுவரை ரூ.43.10 கோடி மீனவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.