கொரோனா பரபரப்புக்கு இடையே மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் - சென்னை அண்ணா அறிவாலயத்தில் 15-ந்தேதி நடக்கிறது
கொரோனா பரபரப்புக்கு இடையே மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் 15-ந்தேதி நடக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கொரோனா மருத்துவம் சார்ந்த விஷயம் என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
இதற்கிடையே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்தும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு மத்திய அரசின் முடிவுக்கு காத்திருப்பதா? என்பதை கண்டித்தும் முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். கொரோனா விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் மக்களுக்கு தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்யக்கூடாது. நிவாரண பொருட்களை அரசிடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ள உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில் கொரோனா பரபரப்புக்கு இடையே மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தி.மு.க. ஏற்பாடு செய்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசு செயல்பாடுகளை கண்டித்தும், ஏழை-எளிய மக்களுக்கு அரசு சார்பில் வழங்க வேண்டிய உதவிகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழை-எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது தவறு என்றும், மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இத்தகைய உத்தரவு போட்ட ஈவு இரக்கமற்ற அந்த உள்ளத்தை கேட்கிறேன். தானும் செய்யமாட்டேன். மற்றவர்களும் செய்யக் கூடாது, செய்ய முன்வந்தால் தடுப்பேன் என்பது தான், இந்த ஆட்சியின் வஞ்சக எண்ணமா?
கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது. இது ஜனநாயக நாடு. யாரும் எவருக்கும் உதவி செய்யலாம். உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம். “கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக” என்ற வள்ளலார் வார்த்தைகளால் எச்சரிக்கை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.