கொரோனா ஆய்வுகளை 10 மடங்கு அதிகரிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா ஆய்வுகளை 10 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தான் நாம் இதுவரை மேற்கொண்டிருக்கிறோமே தவிர, வைரசை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தொடங்கவில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 70 நாட்களாகி விட்டன. ஆனால், தற்போது வரை 6,095 சோதனைகள் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது.
ரத்த மாதிரி சோதனைக்கான ஒரு லட்சம் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. அவை நாளைக்குள் (இன்று) தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில், தமிழகத்தில் கொரோனா ஆய்வுகளை இப்போது இருப்பதை விட குறைந்தது 10 மடங்காவது அதிகரிக்க வேண்டும்.
எனவே, தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நீட்டிக்கப்படவிருக்கும் ஊரடங்கு முடிவடைவதற்குள் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாற்றி விட முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.