ஊரடங்கு எதிரொலி: மக்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை - தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஊரடங்கு எதிரொலி காரணமாக மக்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு நடைமுறை, தீவிர சிகிச்சை உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகள் ஒருபுறம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம் ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் போன்ற பக்கவிளைவுகளை சமாளிக்கவும் போராட வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக மன அழுத்தம் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால், அதை போக்கவேண்டியது உடனடி தேவையாகும்.
தமிழகத்தின் தலைசிறந்த மனநல மருத்துவர்கள், உளவியல் வல்லுனர்களை தேர்வு செய்து அவர்கள் மூலமாக மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் உளவியல் சிக்கல்களுக்கான தீர்வுகளை பண்பலை மற்றும் தனியார் வானொலிகள் மூலமாகவும், அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் தொடர்ந்து தினமும் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
இந்த நிகழ்ச்சிகள் சொற்பொழிவு வடிவிலும், மக்களின் வினாக்களுக்கு வல்லுனர்கள் விடையளிக்கும் வடிவிலும் அமையவேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பும் எதிர்கொண்டு வரும் மன அழுத்தம் போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு பக்குவமாக கையாண்டு வருகிறது. அத்துடன் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கும், மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கொரோனா சிக்கலுக்கு அரசு முழுமையான தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.