கொரோனா தடுப்பு பணிகள்: எம்.எல்.ஏ.க்கள் நிதியில் இருந்து ரூ.1 கோடி பயன்படுத்த உத்தரவு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, முதல்-அமைச்சர் பதில்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு, அனைத்து எம்.எல்.ஏ.க் கள் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்தும் தலா ரூ.1 கோடி ஒருங்கிணைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-07 22:45 GMT
சென்னை, 

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டரில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த நிதியை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும் பதிவிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக் கப்பட்டுள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.

அதை அறியாமல் எதிர்கட்சித் தலைவர், விதிமுறைகளின்படி செய்ததை டுவிட்டரில் குறை கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் அந்தந்த தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மேலும், கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்