தீவிரமாகும் ஊரடங்கு உத்தரவு: ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் கைது - கைது எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்வு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மிகவும் தீவிரமாகி வருகிறது. தடையை மீறியதாக தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-04-05 21:30 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவின் நடவடிக்கைகளும் தீவிரமாகி வருகிறது. நேற்று முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் பகல் 1 மணியுடன் அடைக்கப்பட்டன.

போலீசாரின் கெடுபிடியும் தீவிரமானது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறி சாலைகளில் சென்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் நேற்று வழக்கத்தைவிட சாலைகளில் செல்வோர் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

போலீசார் ஆட்டோக்களில் வீதி, வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர். பகல் 1 மணிக்கு மேல் சாலைகளில் வாகனங்களில் உலா வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு போட்டனர்.

தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்கள் மீது, குறிப்பாக காதல் ஜோடிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் கூறினார்கள். கைதானவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தெருக்களில் சுற்றி திரிந்தவர்களை ‘டுரோன்கள்’ மூலம் போலீசார் கண்காணித்தனர். புதிதாக போடப்படும் வழக்குகள், 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் போடப்படுகிறது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 71 ஆயிரத்து 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது எண்ணிக்கை 78 ஆயிரத்து 707-ஐ தொட்டது. 59 ஆயிரத்து 868 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரூ.21.26 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

நேற்று இரவு கைது எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மட்டும் 10 ஆயிரம் பேர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது.

மேலும் செய்திகள்