அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - மதத்தலைவர்களுக்கு அரசு வேண்டுகோள்
அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மதத்தலைவர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அவர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாபித் அமைப்பின் செயலாளர் ஷுகதேவானந்தா, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவர் சகோதரி பீமா உள்பட பல இந்து அமைப்புகளின் தலைவர்கள், தமிழ்நாடு சுன்னத் முஸ்லிம் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்கள், சென்னை-மயிலை கத்தோலிக்க திருச்சபை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, ஸ்ரீகுருநானக் சத்சங் சபாவின் பொதுச்செயலாளர் பல்பிர் சிங் உள்பட 45 பேர் பங்கேற்றனர். அவர்களுடன் தலைமைச் செயலாளர் தனித்தனிக் குழுக்களாக ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டார். வெவ்வேறு மதத் தலைவர்களின் கருத்துக்களையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் பேசிய இஸ்லாமிய அமைப்பினர், டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் வந்தவர்களால் கொரோனா பரவுகிறது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இயற்கையாக பரவிய அதற்கு மதச்சாயம் பூசக்கூடாது. அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர், அரசின் உத்தரவுகளை பின்பற்ற தயாராக இருப்பதாக தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.