ஊரடங்கு உத்தரவு முடிந்த உடனே தொடங்குவதால் மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்தக்கூடாது - மீனவர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடங்கும் மீன்பிடி தடை காலத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று மீனவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2020-04-01 23:00 GMT
சென்னை, 

தமிழகத்தின் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளில் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஊரடங்கு உத்தரவு முடிந்த மறுநாளே மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்தடுத்து வரும் தடைகளால், மீனவர்கள் அன்றாட தேவைகளுக்கே திக்கு முக்காடும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது. ஏற்கனவே மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால் தங்களுடைய அன்றாட தேவைகளை கூட பூர்த்திசெய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். எனவே இந்த ஆண்டு மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்தமாட்டோம் என்று அரசு அறிவிக்கவேண்டும்.

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 591 மீன்பிடி கிராமங்கள் உள்ளன. மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டால் சென்னை காசிமேடு, கடலூர், நாகை, ராமேசுவரம், தூத்துக்குடி, முட்டம் உள்பட துறைமுகங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை படகுகள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கவேண்டிய சூழல் ஏற்படும். இதனால் 1 கோடி மீனவர்கள் நேரடியாகவும், மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் சுமார் 1 கோடி பேர் என மொத்தம் 2 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

மீன் பிடிக்கக்கூடாது என்று கூறிவிட்டு, மீன் விற்பனை செய்யலாம் என்று அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் படகுகளை பராமரிப்பதற்கு ஒரு நாளுக்கு 25 லிட்டர் டீசலும், ஆட்கள் கூலியாக ரூ.800-ம் கொடுக்கவேண்டி உள்ளது. எனவே ஊரடங்கு காலத்தில் நிவாரணமாக ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மீனவர்களுக்கு அரசு வழங்கவேண்டும். மேலும் படகுகளை பராமரிப்பதற்காக ரூ.2.5 லட்சம் வழங்கவேண்டும். இதேபோல மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்