வெளியில் நடமாடுவதால் கொரோனா வைரஸ் வேகமாக பரவும்; சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எச்சரிக்கை
வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 38 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை இன்று 1,637 ஆக உயர்ந்து உள்ளது. 132 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை கூடுதலாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர்களிடம் நடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி இன்று கூறும்பொழுது, கொரோனா வைரஸ் என்பது கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருப்பதால், நாம் மறைவாக இருப்பது விவேகமானது. வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸ் வேகமாக பரவும். கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்கினாலும் வருங்காலம் கடினம் ஆகவே இருக்கும். எனவே தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை மீறி நடமாடுவோருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.