மாணவரின் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்த பல்கலைக்கழகங்களுக்கு ரூ.210 கோடி நிதி - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மாணவரின் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்துவதற்காக பல்கலைக் கழகங்களுக்கு ரூ.210 கோடி நிதி வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-
சென்னை வேளச்சேரியில், புதிதாக கட்டப்படுகிற வனத்துறை தலைமை அலுவலக கட்டிடங்களுக்கு மின் சாதனங்கள், மேஜை நாற்காலி, கண்காணிப்பு கேமரா அமைத்தல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.22.75 கோடி இந்த நிதியாண்டில் ஒதுக்கித் தரப்படும்.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களை மிக அருகில் காணும் வகையில், ‘விலங்குகள் உலாவிட உலகம்’ ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இயற்கை மற்றும் மனிதர்களால் வனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுத்து, வன விலங்குகள் வனத்தில் இருந்து வெளிவரா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு ரூ.23.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பு வனக்காவல் பணியமைப்பு மற்றும் தீத்தடுப்பு அதிரடிப்படை உருவாக்கி, அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.
யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவதால், மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. இதைத் தடுக்க தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் எக்கு கம்பிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தூண்களை நிறுவி, 5 அடுக்கு கம்பிவேலிகள் 60 கி.மீ. தூரத்திற்கு ரூ.21 கோடி செலவில் அமைக்கப்படும்.
வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.26.25 கோடி செலவில் செய்து கொடுப்பதுடன், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.55.50 கோடி செலவிலும் தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ரூ.21.36 கோடி செலவிலும் ஏற்படுத்தப்படும்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக, 1,890 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் மீதமுள்ள 4,282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ரூ.48.73 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்து தரப்படும்.
அரசு பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத்தொகை ரூ.38.50 கோடியில் இருந்து 2020-21-ம் ஆண்டில் 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
நமது மாநிலத்தில் கண்டறியப்பட்ட திறமையான விளையாட்டு வீரர்களின் திறன்களை மேலும் மேம்படுத்தி, அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பதக்கங்களை வெல்வதற்கு ஏதுவாக 6 உயர் செயல்திறன் அகாடமிகள் ஏற்படுத்தப்படும்.
தடகளம், கையுந்து பந்து, கால்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், வளைகோல் பந்து விளையாட்டுக்கு மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கிலும், நீச்சல் விளையாட்டுக்கு வேளச்சேரி நீச்சல் குள வளாகத்திலும் இந்த உயர் செயல்திறன் அகாடமிகள் ஏற்படுத்தப்படும்.
உள்ளரங்க விளையாட்டுகளில் வீரர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கேரம், டேக்வாண்டோ, ஜூடோ, வாள் சண்டை, பிரிட்ஜ் மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான மாநில அளவிலான ஒரு பயிற்சி மையம், ரூ.12.30 கோடி செலவில் 5 தளங்களைக் கொண்ட விளையாட்டு வளாகம், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள கட்டிடங்களை மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், முதல்கட்டமாக இந்த ஆண்டு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 10 ஆயிரம் மாணவர்கள், தொழிலகங்களில் கள அனுபவம் பெற்று, தங்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ள ஒரு மாணவருக்கு 16 ஆயிரத்து 600 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்க, ரூ.16.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், உயர் மின் அழுத்த பகிர்மான அமைப்பை சிறப்பான முறையில் இயக்கி பராமரிக்க ரூ.6.33 கோடி தொடர் செலவினத்தில் 61 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.
ஆசியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட பெருமைக்குரிய, சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டிடம் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்புராதனக் கட்டிடத்தை அதன் தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
1840-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தேசிய கல்லூரிகள் கட்டமைப்பில், நாட்டிலேயே 3-ம் இடத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த சென்னை, மாநிலக் கல்லூரியின் பழமை வாய்ந்த பல கட்டிடங்களும், கல்லூரி முதல்வர் குடியிருப்பும், அதன் தொன்மை மற்றும் அழகு மாறாமல், ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து பாதுகாக்கப்படும்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், மின் வாகனங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்காக அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கும்,
சுகாதாரம் மற்றும் ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சிக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பாரதியார் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக்காக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கும் தலா ரூ.35 கோடி என மொத்தம் 210 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
ஆண்டுதோறும் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடங்கள் கட்டவும், கணினி மற்றும் உபகரணங்கள் மற்றும் மர தளவாடங்கள் வாங்கவும் ரூ.150 கோடி வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.