கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம்: அரசு ஆஸ்பத்திரிகளில் 6 பேர் தீவிர கண்காணிப்பு - தமிழக அரசு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தில் 6 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-03-13 22:45 GMT
சென்னை, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 17 வெளிநாட்டினர் உள்பட 81 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள விமானநிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து வந்த 1 லட்சத்து 61 ஆயிரத்து 240 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,406 பயணிகள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின் பேரில் 77 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 76 பேரின் பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்தவருக்கு தற்போது செய்யப்பட்ட 2 ரத்த பரிசோதனை முடிவுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சிறப்பு வார்டில் இருந்து ஆண்கள் சிகிச்சை வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்