எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாற்றுத்திறனாளி கைது
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், விமான நிலையம், கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.
மேலும் ரெயில் பெட்டிகள், தண்டவாளங்கள், பார்சல் அலுவலகங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சந்தேகப்படும்படியான நபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த அய்யப்பன் என்பது தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான இவர், குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து திருப்போரூர் போலீசார் அவரை கைது செய்தனர்.