கொரோனா அச்சுறுத்தல்: சட்டசபையில் முதல்-அமைச்சர், துரைமுருகன் ருசிகர விவாதம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த அச்சமும் தேவை இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-03-12 11:07 GMT
சென்னை

சட்டப்பேரவையில் கொரோனா மீதான கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய உறுப்பினர்கள், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க வேண்டும், மாஸ்க் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், ரேசன் கடைகளில் கூட மாஸ்க் கொடுக்கலாம், பேருந்து போக்குவரத்தில் நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சுகாதாரத்துறை அமைச்சர் வேகமாக செயல்படுகிறார், எனவே அவர் சீனாவுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி குறிப்பிட்ட போது, வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்பது தனக்கும் பொருந்தும் என விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

கொரோனா பயம் அதிகமாக இருக்கிறது. தொலைபேசியை எடுத்தால் இருமி கொரோனா என்கிறார்கள். சட்டமன்றத்தில் கொரோனா விவாதம் என எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் உள்ள நிலையில், அரசோ ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருப்பதாக துரைமுருகன் கூறியபோது சிரிப்பலை எழுந்தது.

நாங்கள் எல்லாம் புள்ள குட்டிகாரர்கள், உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால் இடைத்தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம், காப்பாத்துங்க சார் என துரைமுருகன் குறிப்பிட்டபோது சிரிப்பலை எழுந்தது.

ஏசியில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், சட்டமன்றத்தில் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய துரைமுருகன், பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இங்கு உள்ளவர்களுக்கு மாஸ்க் வழங்கி காப்பாற்றுங்கள். நாளை  முதல்  மாஸ்க் அணிந்து தான் பேரவைக்கு வருவோம் என துரைமுருகன்  பேசினார்.

இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை . 70 வயதுக்கு மேல்வயதானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் எனபதால் துரைமுருகன் அச்சப்படுகிறார். தமிழகத்தில் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

சட்டசபைக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் ஏசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறிய சபாநாயகர், மாஸ்க் பயன்படுத்த தேவை ஏற்படும் போது வழங்கப்படும் என கூறினார். 

மேலும் செய்திகள்