தாலிச்சங்கிலி, சொகுசு காரை போலீசார் எடுத்துச்சென்ற வழக்கு - உள்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

வீடு புகுந்து தாலிச்சங்கிலி, சொகுசு காரை சப்-இன்ஸ்பெக்டர் எடுத்துச்சென்றதால், ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கிறகு உள்துறை செயலாளர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் முகப்பேரை சேர்ந்த கனகசபை என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-03-09 22:30 GMT
சென்னை, 

சென்னை முகப்பேரில் உள்ள எனது வீட்டை ரூ.22 லட்சத்துக்கு வாங்குவதாக சரவணன் என்பவர் கூறினார். இதற்காக ரூ.7 லட்சத்தை முன்பணமாக கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் சேலத்தில் வைத்து என்னிடம் சரவணன் வழங்கினார். இந்த பணத்துடன், திருப்பூரில் உள்ள என் சகோதரியின் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தேன்.

2019-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி மதுரவாயல் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, போலீஸ்காரர் வினோத் உள்பட 5 பேர் வீடு புகுந்து, குடும்பத்தினர் முன்னிலையில் என்னை அடித்து உதைத்தனர். பின்னர், வீட்டில் இருந்த தாலிச்சங்கிலி, வளையல் என்று 6½ பவுன் தங்க நகைகள், வெள்ளிக்கொலுசு, 7 லட்சம் ரொக்கப்பணம், சொகுசு கார் ஆகியவற்றை அவர்கள் எடுத்துக்கொண்டனர். என்னையும் சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.                                
அப்போது என் வீட்டை வாங்க முன்பணம் கொடுத்த சரவணன், அவரது முதலாளியிடம் இருந்து பணத்தை திருடியதாகவும், அதில் ரூ.7 லட்சத்தை என்னிடம் கொடுத்ததாகவும் போலீசார் கூறினர். இந்த திருட்டுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தாலும், கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளி ஒருவரிடம் ரூ.300-ஐ நானும், சரவணனும் வழிப்பறி செய்ததாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, எங்களை சிறையில் அடைத்தனர்.

ஒரு மாதத்துக்கு பின்னர், ஜாமீனில் வெளியில் வந்த நான், என்னிடம் பறிமுதல் செய்த கார், தாலிச்சங்கிலி உள்ளிட்ட பொருட்களை கேட்டு போலீஸ் நிலையம் சென்றேன். இதை திருப்பித்தரவில்லை. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். அதன் அடிப்படையில், கோயம்பேடு உதவி கமிஷனர் விசாரணை நடத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, அனைத்து பொருளும் தன்னிடம்தான் உள்ளது என்று கூறினார்.

இதை வாங்க நானும், என் மனைவியும் மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது, எங்களை அசிங்கமான வார்த்தைகளால் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை திட்டினார். என்னுடைய காரை அவரது சொந்த ஊரில் உறவினர் ஒருவர் பயன்படுத்தி வருவதாகவும், தைரியம் இருந்தால் அங்கு சென்று காரை வாங்கிக்கொள் என்றும் சவால் விட்டார். இதனால் மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, என்னுடைய கார், தாலிச்சங்கிலி உள்ளிட்ட தங்கம், வெள்ளிப்பொருட்களை திருப்பித்தர சப்-இன்ஸ்பெக்டருக்கும், மேலும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட வேண்டும். மேலும், கீழ்நிலை அதிகாரிகள் சட்டத்தை மீறி செயல்படுகின்றனரா? என்பதை கண்காணிக்க வேண்டியது உயர் அதிகாரிகளின் பொறுப்பு. இதை செய்ய தவறியதால், ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுவுக்கு பதில் அளிக்க உள்துறை செயலாளர், டிஜி.பி., போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்