தேர்தல் வழக்கு குறுக்கு விசாரணை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என ப.சிதம்பரம் திட்டவட்டம்
தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார்.
சென்னை,
நாடாளுமன்றத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரம், அ.தி.மு.க. சார்பில் ராஜகண்ணப்பன் உள்பட பலர் போட்டியிட்டனர். இதில், 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். இதையடுத்து ப.சிதம்பரம் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜகண்ணப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் ஆஜரானார். அவரை, மனுதாரர் வக்கீல் சுமார் 2 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தார். குறுக்கு விசாரணையில், கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் அரசியல் ஒரு வியாபாரம் என குறிப்பிடப்பட்டிருந்தார்.
அதை சுட்டிக்காட்டி தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை முதலீடாக நினைக்கிறீர்களா? வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான வாக்குகளுக்கும், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது குறிப்பிடப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் இருந்ததா? என்று பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.