அன்பழகன் மறைவுக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இரங்கல்
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய செயலாளர்கள் சஞ்ஜய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. மற்றும் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகர், வீரபாண்டியன் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரும் பணியாற்றிய தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினருக்கு அனுதாபத்தையும் இந்த கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது என்ற இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் 7 காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது மிகவும் தவறானது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. காரணம் நாடாளுமன்றம் ஜனநாயகம் மிக்கது. நமது கருத்துகளை எடுத்துக் கூறுவதற்குதான் நாடாளுமன்றம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கக்கூடாது.
லாபத்தில் இயங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். யெஸ் வங்கிக்கும், காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அமெரிக்காவில் ஆயிரம் வங்கிகள் திவால் ஆனபோது, இந்தியாவில் பிரதமராக மன்மோகன் சிங்கும், நிதி மந்திரியாக ப.சிதம்பரமும் இருந்து ஒரு வங்கிக்கூட திவால் ஆகாமல் பார்த்துக் கொண்டனர். அப்போது வங்கிகள் பலமாக இருந்தன. அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் அதிசயப்பட்டார்கள். எனவே, இப்போது வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் பலம் இழந்து இருப்பதற்கு மோடியும், அமித்ஷாவும் காரணமேயொழிய, காங்கிரஸ் அல்ல.
சர்வாதிகாரிகள் எப்போதும் நாடாளுமன்றத்தை மதிக்கமாட்டார்கள். ஹிட்லராக இருந்தாலும், முசோலினியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தை மதித்து அவர்கள் பதில் சொன்னதாக சரித்திரம் கிடையாது. மோடியும் அதே வரிசையை சார்ந்தவர். பத்திரிகையாளர் சந்திப்பு இருக்காது. நாடாளுமன்றத்துக்கு வருவது கிடையாது. நாடாளுமன்ற விவாதங்களை கவனிப்பது கிடையாது. அதில் பங்கெடுப்பது கிடையாது. எனவே மோடிக்கும், ஜனநாயகத்துக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, டெல்லி கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
ரஜினிகாந்த் முஸ்லிம்களை சந்தித்து கருத்து கேட்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் குடியுரிமை திருத்த சட்டம் தவறானது என்பதை புரிந்து மோடியிடமோ, அமித்ஷாவிடமோ தெரிவித்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவது இல்லை. அது பயனற்ற செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.