உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தடை கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை படைக்கும் பெண்களாக அனைத்து மகளிரும் விளங்கிட வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-07 11:46 GMT
சென்னை,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிஇருப்பதாவது:-

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும், பெண்களின் நல்வாழ்விற்காகவும் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், கிராமப்புர பெண்களின் பொருளாதாரம் மேம்பட விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டம், படித்த பெண்களை ஊக்குவிக்க திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி
நாப்கின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைந்திட 13 அம்ச திட்டம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு
9 மாத காலம் மகப்பேறு விடுப்பு, “அம்மா இருசக்கர வாகனத் திட்டம்”, பணிபுரியும் சென்னையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்துதல், மகளிர் பாதுகாப்பை உறுதிசெய்திட “காவலன்” கைப்பேசி செயலி, தமிழ்நாட்டில் பெண் சிசு கொலையை தடுத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்தல், தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

பாலியல் வன்கொடுமை மற்றும் பணியிடங்களில் உருவாகும் அசாதாரண நிலையை குறித்து புகார் தெரிவிக்க பெண்களுக்கென பிரேத்யமாக  இணையத் தளத்தில் வடிவமைக்கப்பட்ட “புகார் பெட்டி” ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் செயல்பட கூடிய மகளிர் உதவி மையத்தை தொடர்பு கொள்ள 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வாழ்வில் எதிர்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் கற்கனை படிக்கற்களாக மாற்றி, சாதனை படைக்கும் பெண்களாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, இந்த இனிய நாளில், அனைத்து மகளிருக்கும் எனது இதயப்பூர்வமான மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்