போலீஸ் பணிக்கான தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை - ஐகோர்ட்டில் தேர்வாணையம் பதில் மனு தாக்கல்

போலீஸ் பணிக்கான தேர்வு நடைமுறையில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் சீருடை பணியாளர் தேர்வாணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Update: 2020-03-06 04:37 GMT
சென்னை, 

இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்தாண்டு தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பெயர் விவரங்கள் கொண்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது.

இதில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், எழுத்துத்தேர்வில் பங்கேற்காதவர்கள் உடல்தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், எனவே, மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ள இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும். தற்காலிக தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யவேண்டும். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சீருடைப்பணியாளர் தேர்வாணையமும், தமிழக அரசும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது’ என்று வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது.

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளித்துள்ளனர் எனக்கூறி சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்