இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சி சீராய்வு மனு தாக்கல்

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பு எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-03-05 07:48 GMT
சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றாக பறிக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் 7-ந்தேதி தீர்ப்பு அளித்துள்ளது.

“இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல. இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பது அரசுக்கு கட்டாயமல்ல. குறிப்பிட்ட சமூகத்தினர் அரசு பணிகளில் போதிய அளவில் இடம்பெறவில்லையென்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட முடியாது” என சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றாக பறித்துவிடும் நோக்கில் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்துள்ளார். எனவே நீதிமன்றத்தை பயன்படுத்தி இட ஒதுக்கீட்டு உரிமையை ஒழித்துக்கட்ட பா.ஜ.க. அரசு செய்துள்ள சதி இந்த தீர்ப்பின்மூலம் அம்பலமாகியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு இதுவரை சீராய்வு மனு தாக்கல் செய்யாததே பா.ஜ.க.வின் உள்நோக்கம் என்ன என்பதற்கு சான்றாக உள்ளது.

அம்பேத்கர் அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த இட ஒதுக்கீட்டு உரிமையை காக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக இந்த வழக்கில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்