கொரோனா வைரஸ் எதிரொலி: சி.பி.எஸ்.இ. தேர்வு அறைக்கு முகக்கவசம் அணிந்து வர மாணவர்களுக்கு அனுமதி
கொரோனா வைரஸ் காரணமாக சி.பி.எஸ்.இ. தேர்வு அறைக்கு முகக்கவசம் அணிந்து வர மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே சென்று வருகின்றனர். கைகள் மற்றும் முகங்களை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. தேர்வு கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக முகக்கவசம் அணிந்து வரும் மாணவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ.க்கு புகார் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேர்வு அறைக்குள் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வரலாம் என்றும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள பயன்படுத்தும் திரவங்களை எடுத்து செல்லலாம் என்றும் சி.பி.எஸ்.இ. செயலாளர் அறிவித்துள்ளார்.