எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் - அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி அ.தி. மு.க. இலக்கிய அணி சார்பில் ‘சொல்வோம்-வெல்வோம்’ என்ற தலைப்பில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களுக்கு பயிலரங்கம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவருமான பா.வளர்மதி தலைமை தாங்கினார்.
நட்சத்திர பேச்சாளர்களுக்கான பயிலரங்கை தமிழக முதல்-அமைச்சரும், அ.தி. மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனி சாமி, துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
2021 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது. அந்த தேர்தலிலே, அரசு போட்ட திட்டங்களை நாட்டு மக்களுக்கு எப்படி எடுத்து வைப்பது, எதிரிகள் நம்மை பற்றி விமர்சனம் செய்யும்போது, அதை நாகரிகமான முறையிலே பொதுக் கூட்டத்திலே எப்படி பேசுவது என்பது குறித்து விளக்குவதற்கு தான் உங்களை அழைத்திருக்கிறார்கள்.
பேச்சாற்றல் என்பது ஒரு கட்சிக்கு இதயம் போன்றது. ஆகவே, பேச்சாற்றல் வலிமையாக இருந்தால் தான் அந்த கட்சி வலிமை பெறும், ஆட்சி சிறக்கும். இந்தியாவிலேயே திறமை மிக்க மாநிலம், முதல் மாநிலம் என்ற பெயர் பெற்றிருக்கின்றது நம் மாநிலம், முதலிடத்திலே இருக்கின்றோம். பல்வேறு துறைகளில் சாதனைகள் பெற்று தேசிய அளவில் விருதுகளை குவிக்கின்றோம்.
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான பிரசாரம், பொய் பிரசாரம் செய்கிறார்கள். ஒரு பொய்யை திருப்பி, திருப்பி மக்களிடத்தில் எடுத்து சொல்கின்றபோது, மக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதைத்தான் இப்பொழுது எதிர்க்கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை முறியடிக்கவேண்டிய கடமை நம் பேச்சாளர்களுக்கு இருக்கிறது.
வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழகத்தில் எந்த பணியும் நடைபெறவில்லை என்ற ஒரு தவறான தோற்றத்தை பரப்பி வருகிறார்கள். அதை எல்லாம் முறியடிக்கிற வேலையில் பேச்சாளர்கள் ஈடுபடவேண்டும். 2021-ல் வெற்றி பெற்று ஆட்சி தொடர நீங்கள் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
பயிலரங்கம் இந்த நேரத்தில் மிகவும் அத்தியாவசியமாகவும், அவசியமானதாகவும் உள்ளது. பொதுக்கூட்டங்களில் அரசின் திட்டங்களையும், கட்சியின் கொள்கைகளையும் எடுத்து சொல்லுகின்ற பேச்சாற்றலின் மூலமாகத் தான் ஆட்சி அமைக்க முடியும். ஆட்சியிலும் நீடிக்க முடியும் என்ற வரலாறு இருக்கிறது.
தலைமைக்கழக பேச்சாளர்களின் பணி கட்சிக்கு தேவையாக இருக்கிறது. சிறுபான்மை மக்கள் மீது அன்பும், அக்கறையும் வைத்திருக்கும் கட்சி அ.தி.மு.க. தான். மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் அ.தி.மு.க. தான் ஆட்சியில் தொடரவேண்டும் என்ற நிலைமையை பேச்சாளர்கள், மக்களிடம் ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. இலக்கிய அணி பயிலரங்கத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3 ஆண்டு கால சாதனைகளை பாராட்டி, திரைப்பட இயக்குனர் ஆதிராஜன் எழுதி, இயக்கிய 5 நிமிடங்கள் ஓடும் வீடியோ பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.
‘நல்ல தலைவர் நாடாண்டா போதும், நாடு என்றுமே சொர்க்கமாகும்’ என்று தொடங்கும் இந்த பாடல் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இந்த பாடலை கேட்டு, இயக்குனரையும், பாடல் குழுவினரையும் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நட்சத்திர பேச்சாளர்களான நடிகர்-நடிகைகள் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.