2025க்குள் காச நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
2025க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
விருதுநகர்,
விருதுநகரில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். விழாவில் மத்திய மத்திய மந்திரி ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் 22 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது.
விருதுநகரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய பின் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகிறது. ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது சரித்திர சாதனை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவ கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெரும் தொகை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மூலம் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தரமான கல்வி கிடைக்கும் போது வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். 2025க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்.
குண்டாற்றின் குறுக்கே 2 உயர்மட்டபாலங்கள் கட்டப்படும். விருதுநகர் வியாபார நகரமாகவும், சிவகாசி தொழில் நகரமாகவும் தற்போது விளங்கி வருகிறது.
சிவகாசியை மாநகராட்சியாக்கும் பூர்வாங்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிவாயு மயானம் அமைத்துத்தரப்படும். விருதுநகர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்.
என்.பி.ஆரில் புதிதாக கொண்டு வந்துள்ள 3 விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. சிறுபான்மையினர் அனைவரும் சில குழப்பவாதிகளை நம்ப வேண்டாம். நிம்மதியாக வாழுங்கள். தமிழ்மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள். சிறுபான்மையினரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு எதிர்க்கட்சியினர் அச்சத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.