பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக மக்கள் பொங்கலை கொண்டாட அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். போகி பண்டிகை நாளை துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் மக்கள் பொங்கலை கொண்டாட இருக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு கூடுதலாக 29,213 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், நாளை மறுநாள் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துகள், ரெயில்கள் மூலமும் சென்னை நகரை விட்டு புறப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.
இதன் காரணமாக சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
அதே சமயம் பொங்கல் பண்டிகையையொட்டி 10,517 பேருந்துகளில் இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.