போகிப் பண்டிகையில் காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை -மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை
போகிப் பண்டிகையையொட்டி காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
ஆனால் இன்றைய சூழலில் போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் , ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிப்பதினால் நச்சு மிகுந்த ரசாயன வாயு அதிலிருந்து வெளியேறுகிறது.
இதனால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆகிறது. சென்னை நகரை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் போகியன்று ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இந்த நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இதனைத் தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.
போகி தினத்தின் முந்தைய நாள் இரவு முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட காவல்துறை உதவியுடன் 15 குழுக்கள் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போகிப் பண்டிகையின்போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்வதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் முந்தைய நாள் மற்றும் போகி பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று தரத்தினை கண்காணித்து காற்று மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.