கடத்தப்பட்டதாக கூறிய தி.மு.க. கவுன்சிலர் ஐகோர்ட்டில் ஆஜர் வழக்கு தொடர்ந்த மகனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
அ.தி.மு.க.வினர் கடத்தியதாக புகார் கூறப்பட்ட தி.மு.க. கவுன்சிலரை நேற்று ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
மதுரை,
அ.தி.மு.க.வினர் கடத்தியதாக புகார் கூறப்பட்ட தி.மு.க. கவுன்சிலரை நேற்று ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த மகனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-
என்னுடைய தந்தை சாத்தையா, சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு திருவரங்கத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3-ந்தேதி காலை 5 மணியளவில் வீட்டில் இருந்த அவர் வெளியில் சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு எனது தாய் தொடர்பு கொண்டார். அப்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டோர் அவர்களது கட்டுப்பாட்டில் என் தந்தையை வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 6-ந்தேதி எனது தந்தையை ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பேற்க அவர்கள் அழைத்து வந்தபோதும் சந்திக்க முடியவில்லை.
பதவியேற்பு முடிந்ததும், என் தந்தையை வலுக்கட்டாயமாக மீண்டும் கூட்டிச்சென்றனர். கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள எனது தந்தையை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் தந்தையை ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் தந்தை சாத்தையாவை போலீசார் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, ‘தன்னை யாரும் கடத்தவில்லை. மகனுடன் இருக்க விரும்பாததால், மகளின் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தேன்’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘சொந்த பிரச்சினைக்காக கோர்ட்டின் நேரத்தை மனுதாரர் வீணடித்துள்ளார். எனவே அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.