பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்ட ஆதரவு பேரணி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் பங்கேற்பு

பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்ட ஆதரவு பேரணி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் பங்கேற்பு

Update: 2020-01-07 23:15 GMT
சென்னை, 

சென்னையில், தமிழக பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்ட ஆதரவு பேரணி நடந்தது. இதில் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு முறை ஆகியவற்றுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நாடு முழுவதும் பேரணி, போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் குடியுரிமை சட்டத்தை வரவேற்று தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னையில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை கட்சியின் முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், எச்.வி. ஹண்டே, பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வழிநடத்தி சென்றனர். துணைத்தலைவர் எம்.என்.ராஜா, செயலாளர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், கோட்ட பொறுப்பாளர் இரா.பிரகாஷ், கூட்டுறவு பிரிவு மாநிலத்தலைவர் வி.எஸ்.ஜே.சீனிவாசன், இளைஞரணி செயலாளர் ஜி.சுரேஷ்கர்ணா, வர்த்தகரணி செயலாளர் சி.ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இளைஞரணி மாநிலத்தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் திரளான இளைஞர்களும் பங்கேற்றனர்.

சென்னை புதுப்பேட்டை ஆதித்தனார் சாலை அருகே தொடங்கிய இந்த பேரணி லேங்க்ஸ் கார்டன் சந்திப்பில் நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர் ஜெய் பாண்டா, பேரணி நிறைவில் பேசுகையில், “குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் மக்களுக்கு விரோதமானது என எதிர்க்கட்சிகள் விஷம பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டம் யாருடைய உரிமையையும் பறிக்க வந்தது கிடையாது. அதை மக்கள் புரிந்துகொண்டு, பொய் பிரசாரத்தில் ஈடுபடுவோர் முகத்திரையை கிழிக்க வேண்டும்”, என்றார்.

பேரணியில் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த நடிகர் ராதாரவி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ், இந்து முன்னணி மாநகர தலைவர் கார்த்திகேயன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்