தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் -அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை,
ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் (2020) முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.
கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக்கோரிய திமுகவின் மனு பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் தனபால் கூறினார்.