மாவட்ட ஊராட்சி, ஒன்றியங்களில் அதிக இடங்களில் வெற்றி உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. முந்தியது
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அ.தி.மு.க.வை எதிர்க்கட்சியான தி.மு.க. முந்தியது. மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
சென்னை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்றுமுன்தினம் காலை தொடங்கியது.
ஓட்டு எண்ணிக்கை நீடிப்பு
ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு இருந்தனர். இதனால் வாக்குகளை தனித்தனியாக பிரித்து எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு கட்சி சார்பாக தேர்தல் நடந்ததால் அந்த பதவிகளுக்கான வாக்குகளை எண்ணி முடிக்க கூடுதல் நேரம் ஆனது. இதனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
நேற்றுமுன்தினம் விடிய விடிய நடைபெற்ற வாக்கு எண்ணும் பணி நேற்றும் தொடர்ந்தது.
தி.மு.க. முந்தியது
இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே இடங்களை கைப்பற்றுவதில் இரு கட்சிகளும் நெருக்கமாகவே வந்தன. என்றாலும் இந்த தேர்தலில் ஆளும் அ.தி. மு.க.வை தி.மு.க. முந்தியது.
மாவட்ட ஊராட்சிகளிலும் (மாவட்ட பஞ்சாயத்து), ஊராட்சி ஒன்றியங்களிலும் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது.
மொத்தம் உள்ள 27 மாவட்ட ஊராட்சிகளில் 14 மாவட்ட ஊராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி. மு.க. 13 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றியது.
மாவட்ட ஊராட்சிகள்
அதன்படி தி.மு.க. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தஞ்சை, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், நாகை, நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 14 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றி உள்ளது.
அ.தி.மு.க. அரியலூர், கரூர், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, தேனி, நாமக்கல், கடலூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, விருதுநகர் ஆகிய 13 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றி இருக்கிறது.
ஊராட்சி ஒன்றியங்கள்
ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தமட்டில், 314 ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 5,090 வார்டு உறுப்பினர் இடங்களில் தி.மு.க. கூட்டணி 2,356 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 2,136 வார்டு உறுப்பினர் இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் அந்தநல்லூர், உப்பிலியபுரம், தா.பேட்டை, திருவெறும்பூர், தொட்டியம், புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, முசிறி, வையம்பட்டி ஆகிய 12 ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது.
துறையூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 19 வார்டுகளில 9 வார்டுகளில் தி.மு.க.வும், 8 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதுபோல் லால்குடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 10 வார்டுகளில் தி.மு.க.வும், 8 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த இரு ஒன்றியங்களிலும் சுயேச்சை வேட்பாளர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த கட்சியே தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், சாணார்பட்டி, திண்டுக்கல், தொப்பம்பட்டி, பழனி, ரெட்டியார்சத்திரம், வத்தலக்குண்டு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது. இதில் திண்டுக்கல், பழனி ஆகிய 2 ஒன்றியங்களை கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. தன் வசமாக்கி உள்ளது.
குஜிலியம்பாறை, நத்தம், நிலக்கோட்டை, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய 5 ஒன்றியங்களை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. அதில் குஜிலியம்பாறை, நிலக்கோட்டை ஆகிய 2 ஒன்றியங்களை கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அ.தி.மு.க. பிடித்து உள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், நங்கவள்ளி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய 13 ஒன்றியங்களில் அ.தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது.
அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர், கெங்கவல்லி, கொளத்தூர், காடையாம்பட்டி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் சரிபாதி அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் கணிசமான அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்களின் ஆதரவை பெற்று இந்த ஒன்றியங்களிலும் தலைவர் பதவிகளை அ.தி.மு.க.வே கைப்பற்றும் நிலை உள்ளது.
ஆனால், சேலம், ஏற்காடு ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களிலும் அ.தி.மு.க.-தி.மு.க. கூட்டணி சரிசமமான கவுன்சிலர்களை பெற்றுள்ளதால் யார் ஒன்றியகுழு தலைவர் ஆவார் என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. இருப்பினும் ஏற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி எஸ்.சி. (பெண்கள்) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கலைவாணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே அங்கும் அ.தி.மு.க.வுக்கே ஒன்றியக்குழு தலைவர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், மொத்தம் உள்ள 20 ஒன்றியங்களில் 19 ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு அ.தி.மு.க.வுக்கே உள்ளதாக கருதப்படுகிறது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடலூர், அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, கம்மாபுரம், குமராட்சி, மங்களூர், மேல்புவனகிரி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய 10 ஒன்றியங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதன்மூலம் அந்த ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை அ.தி.மு.க.வினர் சுலபமாக கைப்பற்றி விடுவார்கள். காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நல்லூர் ஆகிய 3 ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 ஒன்றியங்களில கெலமங்கலம் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், தளி, மத்தூரில் தி.மு.க.வும் ஒன்றியகுழு தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. ஓசூர், சூளகிரி ஒன்றியங்களில் அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சி ஆதரவுடன் ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 ஒன்றியங்களிலும் அ.தி.மு.க., தி.மு.க. இடையே ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. சுயேச்சைகளின் ஆதரவை பொறுத்தே இந்த ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கு வருவது அ.தி.மு.க.வா? இல்லை தி.மு.க.வா? என்பது தெரிய வரும்.
கோவை
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் காரமடை, கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கு, எஸ்.எஸ்.குளம், தொண்டாமுத்தூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றி இருக்கிறது. மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள 6 வார்டுகளில் அ.தி.மு.க. 3 இடங்கள், தி.மு.க. 3 இடங்கள் என்று சமமாக வெற்றி பெற்று உள்ளதால், இங்கு இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.
மீதமுள்ள ஆனைமலை, அன்னூர், சூலூர், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த கட்சியே தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றக்கூடிய நிலை இருக்கிறது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் தாராபுரம், மடத்துக்குளம், மூலனூர், பல்லடம், பொங்கலூர், உடுமலை ஆகிய 6 ஒன்றியங்களை தி.மு.க.வும், அவினாசி, குடிமங்கலம், வெள்ளகோவில் ஆகிய 3 ஒன்றியங்களை அ.தி.மு.க.வும் கைப்பற்றி இருக்கின்றன. குண்டடம், ஊத்துக்குளி, திருப்பூர், காங்கேயம் ஆகிய 4 ஒன்றியங்களிலும் சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்றும் நிலை உள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண்டிப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய 3 ஒன்றியங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. தேனி, சின்னமனூர் ஆகிய ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 14 வார்டுகளில் அ.தி.மு.க. 7 இடங்களும், தி.மு.க. 7 இடங்களும் பெற்றிருப்பதால் இழுபறி நிலை நீடிக்கிறது. ஒன்றிய தலைவர் பதவி, துணைத்தலைவர் பதவி பெறுவதற்கு பெரும்பான்மையில்லாத சூழல் உள்ளது. எனவே தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுவதில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பெரியகுளம் ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகளில் அ.தி.மு.க. 6 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஒரு இடத்தையும் பெற்று உள்ளன. தி.மு.க. 8 இடங்களை பெற்று உள்ளது. இருந்தபோதிலும் தலைவர், துணைத்தலைவர் பதவி பெறுவதற்கு பெரும்பான்மையாக 9 இடங்களை பிடிக்க வேண்டும். அ.ம.மு.க. ஒரு இடத்தை பிடித்துள்ளது. இங்கு அ.ம.மு.க. கவுன்சிலர் எடுக்கக்கூடிய நிலைப்பாடு தலைவர், துணைத்தலைவர் பதவியை நிர்ணயிக்கும்.
போடியில் மொத்தம் 13 வார்டுகளில் அ.தி.மு.க. 6 இடங்களும், தி.மு.க. 5 இடங்களும், அ.ம.மு.க. ஒரு இடமும் பெற்று உள்ளன. ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார். எனவே இங்கும் இழுபறி நிலை ஏற்பட்டு இருக்கிறது.